Thursday, October 12, 2017

அவல் பாயசம் | AVAL PAYASAM

aval2bpayasam2brecipe
கோகுலாஷ்டமிக்கு செய்யக்கூடிய மிக எளிய பாயசம். சற்று நேரத்தில்  செய்துவிடக்கூடிய பாயசம். அம்மா இதை மாதம் இரு முறையாவது செய்துவிடுவாள். என் மாமியும் வீட்டிற்கு விருந்தாளி வந்தால் இந்த பாயசத்தை தான் செய்வார்கள். அனால் சீனி சேர்த்து செய்வார். மைக்ரோ வேவ் அவனில் செய்துவிடுவார். இங்கே நான் அடுப்பில் செய்யும் முறையை குறிப்பிட்டுள்ளேன்.

என்ன தேவை?

கெட்டி அவல் – 1/2 கப்
வெல்லம் – 1/4 கப் + 2 மேஜைக்கரண்டி (1/2 கப் வரை சேர்க்கலாம்)
பால் – 2 கப்
ஏலக்காய் – 1
முந்திரிப்பருப்பு – 5
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை

எப்படி செய்வது?

  1. வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் அவலை பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.
  2. பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி, வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும்.
  3. 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், ஒரு வடிகட்டியில் வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.
  4. ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும். வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம்.

உங்கள் கவனத்திற்கு

  • அவல் நன்கு  வெந்தவுடன் தான் வெல்லம் சேர்க்கவேண்டும். வெல்லம் சேர்த்த பின் அவல் வேகாது.
  •  இதே போல வெள்ளை சக்கரை சேர்த்தும் செய்யலாம்.
  • பாலில் வேகவைக்காமல் தண்ணீரில் வேக வைத்து, பின் இறக்கும் முன் சிறிது பால் சேர்த்தும் செய்யலாம்.

மோதகம், MOTHAGAM RECIPE

மோதகம் - 12 செய்யஎன்ன தேவை?


மேல் மாவு :அரிசி மாவு / இடியப்ப மாவு – 1/2 கப்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு, தண்ணீர் – தேவையான அளவுதேங்காய் பூரணம் :
துருவிய தேங்காய் – 1 கப்
வெல்லம் – 1 கப்பிலிருந்து 3 மேஜைக்கரண்டி எடுத்து விடவும்
ஏலக்காய் – 2
எப்படி செய்வது?
  1. போதுமான தண்ணீரை, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். மாவில், உப்பு சேர்த்து, கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பிசையவும். ஒரு தோசைத்திருப்பியின் காம்பு கொண்டு கிளறலாம். அல்லது ஒரு கரண்டி கொண்டும் கிளறலாம்.
  2. சிறிது காய் பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், நன்கு பிசைந்து,  12 சமமான அளவு உருண்டைகளாக உருட்டி, மூடிவைக்கவும்.
  3. வெல்ல பூரணத்திற்கு, தேங்காய், மற்றும் வெல்லத்தை ஒன்றாக மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  4. வெல்லம் இளகி, நன்கு தேங்காயுடன் கலந்து மறுபடியும் இறுகும் வரை கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
  5. ஆறியபின் சம அளவு உருண்டைகளாக உருட்டவும்.
  6. கைகளில் சிறு துளி எண்ணெய் தடவி, உருட்டிய மாவு உருண்டையை,  மெல்லிய தடிமன் உள்ள கிண்ணமாக செய்யவும்.
  7. உள்ளே பூரண உருண்டையை வைத்து, மூடி, அழகாக மோதகம் வடிவில் ஷேப் செய்யவும்.
  8. இட்லி தட்டில் எண்ணெய் தடவி, செய்த மோதகங்களை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
உங்கள் கவனத்திற்கு
  • தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும், இல்லையெனில், மாவு வேகாமல் கிண்ணம் செய்ய வராது, வின்டு  போய் விடும் .
  • கொழுக்கட்டை செய்ய , அரிசி மாவு மிகவும் நைசாக இருக்க வேண்டும். 
  • கொழுக்கட்டை வெந்துவிட்டதை, பளபளப்பான  மேல் மாவை கொண்டு அறியலாம்.