கம்பு, ஆங்கிலத்தில் ‘pearl millet’ எனக்கூறுவர். இந்தியில் பஜ்ரா எனக்கூறுவர். இது, நம் நாடு சிறுதானிய வகைகளுள் ஒன்று. கம்பு மாவு, கடைகளில் எளிதில் கிடைக்கின்றது. இதனை வாங்கி, எளிதில் கரைத்த மாவு தோசையோ அல்லது சப்பாத்தி மாவில் கலந்தோ உபயோகிக்கலாம். கஞ்சியும் எளிதில் செய்யலாம். அனால் நான் கொழுக்கட்டை செய்வது இதுவே முதல் முறை. மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் இந்த சத்தான, ஆவியில் வேகா வைத்த கொழுக்கட்டையை, சிற்றுண்டியாகவோ அல்லது காலை உணவாகவோ சாப்பிடலாம். தொட்டு கொள்ள, கார சட்னி அல்லது புதினா சட்னி மிகவும் ஏற்றது.
தேவையான பொருட்கள் – என்ன தேவை?
- கம்பு – 1 கப்
- தேங்காய், பொடியாக பற்களாக அறிந்தது – 3 மேஜைக்கரண்டி
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி, பொடியாக நறுக்கியது – 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை – 3 மேஜைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க : - எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
- பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 ஆர்க்கு
செய்முறை – எப்படி செய்வது?
- கம்பை குறைந்தது மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது நேரம் ஒரு சுத்தமான துணியில் பரப்பி வைக்கவும்.
- தண்ணீர் உறிஞ்சியவுடன், மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம், கருவேப்பில்லை தாளிக்கவும். பச்சை மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 1 & 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, கொதிக்க விடவும்.
- கொதி வந்தவுடன், அரைத்த கம்பு மாவு சேர்த்து, மிதமான தீயில் மூடி வேக வைக்கவும்.
- 4 நிமிடம் வெந்தவுடன், ஆற வைக்கவும். மூடி வைத்தால் காய்ந்துபோகாமல் இருக்கும்.
- வெதுவெதுப்பாக ஆனவுடன் கைகளில் நல்லெண்ணெய் தடவி, பிடி கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.
- ஒரு இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கொழுக்கட்டைகளை வைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
சூடாக சட்னியுடன் பரிமாறவும். எப்பொழுதும் மூடி வைத்தால் காய்ந்து போகாமல் இருக்கும்.

No comments:
Post a Comment